×

பால் மற்றும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2020ல் அந்த விதிவிலக்கும் அரசாணை 37 மூலம் திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி பி.சாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் பேக்கிங் செய்வதை தடை செய்வது சாத்தியமில்லை. சிறுதொழில் துறையும் இது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே அதற்கு விதிவிலக்கு அளிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கட்கள், மருந்து பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க விலக்களிக்க மறுத்து 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, விதிவிலக்கு அளிக்கப்பட்டதை தொடர வேண்டும் என்றும் எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், அன்றாட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெறுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை 37க்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இதன்மூலம் பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அன்றாட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பால் மற்றும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,High Court ,Tamil Nadu ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...